Google

Thursday, 11 June 2009

ஜன்னல்

கொசுவத்திச் சுருளை சற்றுப் பின்னோக்கி சுற்றுகிறேன்... அட ஒன்னும் இல்லங்க ! நான் ஏழாம் வகுப்பு படித்தபொழுது நடந்த ஒரு சம்பவம் !

நான் அந்த பள்ளியில் அந்த வருடம்தான் சேர்ந்திருந்தேன். அது ஒரு அரசு உதவி பெரும் பள்ளி. எனது வகுப்பறை பள்ளியில் அப்பொழது புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் இருந்தது.

தலைமை ஆசிரியர் அறையிலிருந்து சாக்பீஸ் கொண்டுவருவது, தினசரி பதிவேடு கொண்டு வருவது போன்ற சிறு சிறு வேலைகளை வகுப்பு தலைவனோ /தலைவியோ (50/50 ங்கோ) செய்வது வழக்கம். நான் புதிது என்பதால் எனக்கு அப்போது இது மாதிரியான வேலைகள் ஒன்றும் கிடையாது. நான் வகுப்பில் முன்னால் அமர்ந்திருந்த காரணத்தால், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லுமுன் வகுப்பறை ஜன்னல்களை தாளிடும் பொறுப்பு என்னிடம் வந்தது.
(இப்பவும் ஆபீஸ்ல வாரம் ஒருமுறையோ இரண்டு முறையோ அந்த வேலையத்தான் செய்றேன் !!! அதாங்க Windows Shutdown :-))

அந்த ஜன்னல்கள் அனைத்தும் கண்ணாடி மற்றும் இரும்பால் ஆனவை. நல்ல தடிமனுள்ள இரும்பு கம்பிகள் குறுக்கும் நெடுக்குமாக இருக்கும். அவற்றை தாளிடும் பொழுது சரியாக தாளிட வேண்டும். இல்லா விட்டால் மீண்டும் வெளியில் திறந்து கொள்ளும் (எல்லா ஜன்னலும் அப்படித்தாண்டா அப்படீன்னு நீங்க சொல்றது கேக்குது !!!).

அது மழை காலமாதலால், ஒரு சனிக்கிழமையன்று சற்று பலமான காற்றுடன் மழை பெய்தது. அதில் மற்ற வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகள் சரியாக மூடாத காரணத்தால் உடைந்திருந்தன. அதிர்ஷ்டவசமாக எனது வகுப்பறை ஜன்னல்கள் மட்டும் தப்பித்திருந்தன.

திங்களன்று அவற்றை பார்வையிட வந்திருந்த பள்ளியின் தாளாளர், எனது வகுப்பில் மட்டும் எப்படி ஜன்னல்கள் உடையவில்லை என்று எனது வகுப்பாசிரியரைக் கேட்க, அவர் என்னை காண்பித்து, இவன்தான் தினமும் ஜன்னல்களை தாளிட்டு செல்பவன் என்று வகுப்பில் அனைவர் முன்னும் சொல்ல, வகுப்பில் அனைவர் முன்பும் குறிப்பாக எனது சைட் (அப்பவே நாங்க ஆரம்பிச்சுடோம்ல !) முன்பு நான் ஹீரோ போலத் தெரிவது போன்றதொரு உணர்வு இருந்தாலும், எங்கே எல்லா வகுப்பு ஜன்னல்களையும் தினமும் தாளிட்டுவிட்டு செல் என்று தாளாளர் சொல்லிவிடுவாரோ என்ற பயம் எனக்குள் இருந்தது.

நல்லவேளையாக அவர் அப்படி எதுவும் சொல்லாமல், என்னிடம் எப்படித் தாளிடுவது என்று கேட்டுவிட்டு, அதை மற்ற வகுப்பறை மாணவர்களுக்கும் சொல்லித் தருமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

இந்த நிகழ்வால் என்னைப் பற்றி பள்ளியில் பரவலாகத் தெரிய ஆரம்பித்து இருந்த சமயத்தில் எனக்கு ஒரு பெரிய பல்பு காத்திருந்தது !!

அடுத்த வாரத்திலேயே, ஒரு பள்ளி நாளில் சுமார் மதியம் ஒரு மூன்று மணியளவில், திடீரென மீண்டும் காற்றுடன் மழை ஆரம்பித்தது. அப்பொழுது வகுப்பில் இருந்த ஆசிரியர் என்னிடம் ஜன்னல்களை தாளிடச் சொன்னார். வகுப்பில் இருந்த மூன்று ஜன்னல்களில் இரண்டினை தாளிட்டுவிட்டேன்.

எனக்கு வரப்போகும் ஆப்பை பற்றித் தெரியாமல்,  மூன்றாவது ஜன்னலை தாளிடும் சமயத்தில், காற்று திடீரென வேகமாக அடிக்க, ஜன்னல் சடாரென அடிக்க எனது வலது கை கண்ணாடிக்கும் இரும்பு கம்பிக்கும் இடையில் சிக்கி பெரிய வெட்டு ஒன்று விழுந்தது. கண்ணாடி தூள் தூள் ஆகியிருந்தது.

இரத்தம் வருவதைக்கண்ட ஆசிரியர், என்னை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு எட்டாம் வகுப்பில் உயரமாக இருந்த ஒரு அண்ணனிடம் சொன்னார். அந்த அண்ணன் முதல் உதவி என்ற பெயரில் டிஞ்சரை எனது கையில் ஊற்ற நான் அலறியது பள்ளியில் பலருக்கும் நினைவில் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இது போன்ற சமயங்களில், ஒரு குறிப்பிட மருத்துமனையில், எங்களது பள்ளி மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். பள்ளி நிர்வாகம் அதற்குண்டான செலவை பிறகு ஏற்றுக்கொள்ளும் என்று அந்த அண்ணன் சொல்லி கேள்விபட்டேன்.

கண்டிப்பாக தையல் போடவேண்டும் என்று பலமுறை சில்லறை வாங்கிய (அதாங்க கீழ விழுந்து அடி படறது) அனுபவத்தால் முன்னமே தெரிந்தது. ஏற்கனவே பல தையல்கள் போடப்பட்டு இருந்ததால், அப்போது அதை பற்றிய கவலை இல்லை.எனது அம்மாவை நினைத்துதான் கவலையுடன் இருந்தேன். கடந்த மூன்று வருடங்களாகத்தான் எனக்கு எந்த அடியும் படவில்லை என்று நிம்மதியாக இருந்தவர்கள் இதைப் பார்த்தால் அழுவார்களே என்று !

எனது நேரம், எப்போதும் இருக்கின்ற மருத்துவர் அன்று அங்கு இல்லை போலும். அவருக்கு பதிலாக இருந்த இன்னொரு மருத்துவர், பணம் இல்லாமல் சிகிச்சை செய்யவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ ? மயக்க மருந்து தராமலேயே தையல் போடா ஆரம்பித்து விட்டார். அப்படி ஒரு மரண வலி !

பிறகு எப்போடியோ எனது அம்மாவை சமாதானப் படுத்தி, ஒருவாறு மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தேன். அனைவரும் என்னை ஒரு ஜோக்கர் மாதிரியாகப் பார்ப்பது போலிருந்தது ! ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு எதுவும் நான் எழுத வேண்டாம் என்று ஆசிரியர் கூறியிருந்தது !

ஒரு மாதமும் முடிந்தது !! சரி வீட்டுப்பாடம் எழுதலாம் என்று எண்ணி எழுத ஆரம்பித்தேன். ஏனோ எழுதினால் அடிபட்ட இடத்தில அப்படியொரு வலி ! எதோ உள்ளுக்குள் நெருடுவது போலிருந்தது ! சரியாகிவிடும் என்று நினைத்து ஒரு வாரம் யாரிடமும் சொல்லவில்லை. ஒரு வாரத்திற்கு பிறகும் வலி சரியாகவில்லை.

பென்சில் சீவுவதற்காக வைத்து இருந்த பிளேடு கொண்டு, தையல் போடப்பட்ட இடத்தில லேசாக கீற, ஒரு சிறிய கண்ணாடித் துண்டு ஒன்று உள்ளிருந்து வெளியில் எட்டிப்பார்த்தது ! அதை வெளியில் எடுத்து விட்டால் போதும் என்று மேலும் லேசாக கீறி அதை வெளியில் எடுத்துவிட்ட பிறகுதான் வலி இல்லை.

அந்த மருத்துவரின் அலட்சியமான செயலை கண்டித்து இருக்க வேண்டுமென இப்போது நான் நினைத்தாலும், அப்போது வலி போன காரணத்தால் என்னவோ, யாரிடமும் கூறாமல் விட்டுவிட்டேன் !!!

இது மாதிரியான பல சம்பவங்கள் தொடரும்...
(உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டும்)

4 comments:

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள்!

சுட்டிப் பையன் said...

நன்றி தமிழ் பிரியன் !

Jana said...

வாழ்த்துகள் தொடருங்கள்...

சுட்டிப் பையன் said...

நன்றி ஜனா !!!