Google

Wednesday, 17 June 2009

பசங்க

"பசங்க" படம் பலரின் இப்போதைய அபிமான திரைப்படம் ஆகிவிட்டது அனைவரும் அறிந்த விஷயம். பலரின் பள்ளிப் பருவத்தை அவர்களது கண்முன்னால் மீண்டும் கொண்டு வந்து நிறுத்திய பெருமை இப்படத்திற்கு நிச்சயம் உண்டு. இப்படத்தை பார்த்தபொழுது, பல விஷயங்கள் எனது நினைவில் வந்து சென்றன.

லீடர் தேர்ந்து எடுக்கும்பொழுது, பக்கடா ஜீவாவிற்கு இரண்டு கைகளையும் தூக்கி கள்ள ஓட்டு போடுவது.

சைக்கிள் இல்லாதவர்கள் கார் ஓட்டுவது, பைக் ஓட்டுவது (நாங்க பஸ் லாரியெல்லாம் கூட ஓட்டுனோம் ! நண்பன் ஒருவன் விமானம் ஓட்ட ட்ரை பண்ணி கை உடஞ்சதால் நாங்க ட்ரை பண்ணல. (ஒரு உயரமான இடத்திலிருந்து குதிச்சுட்டான். கேட்டா ஏரோ ப்ளேன் ஒட்டுனேங்கறான்).

அடுத்தவன் அத்த பொண்ண கரெக்ட் பண்றது !!! (நான் இல்லீங்கோ)

மற்றவர்களுக்கு கேட்கும்படி சத்தமாக படிப்பது. (படிக்கறதா ? அப்படின்னா ?)

சமயம் பார்த்து எதிரிய போட்டுகொடுக்கறது... எதிரிக்கு போட்டுகுடுத்தவனோட ஆளு ஹெல்ப் பண்ணி பொகையா கெளப்புனது !!

சிறுவர்களுக்கு இடையில் சில நேரம் சண்டை வந்து கொண்டே இருக்கும். சில பள்ளிகளில் தனியாக சண்டையிடுவார்கள். சிலர் க்ரூப்பா சண்டை போடுவாங்க ! ( நான் ரெண்டும் செஞ்சுருக்கேன் அப்படிங்கறீங்களா ? )

நான் ஐந்தாவது படிக்கும்பொழுது நடந்த ஒரு க்ரூப் சண்டை இது. மொத்தம் ரெண்டு க்ரூப் இருந்துச்சு. எதுக்கு சண்டை வருதுன்னு யாருக்கும் தெரியாது. ஒருத்தன அடிச்சுட்டா அவன் க்ரூப் அடிச்சவன தேட ஆரம்பிக்கும். சில சமயம் க்ரூப் லீடர்ஸ் மட்டும் சண்டை போடுவாங்க. ஒரு லீடர் பேரு ஹரி (கட்டதுரை) இன்னொரு லீடர் பேரு ராஜேஷ்(கைப்புள்ள). வழக்கம் போல நம்ம கைப்புள்ளயோட ஆள (பூச்சிபாண்டி -ரவி) கட்டதுரையோட ஆளுங்க கைமா பண்ணிட்டன்னுங்க.

அதைப்பார்த்த கைப்புள்ளயோட இன்னொரு ஆளு நம்ம கைபுள்ளகிட்ட ஓடிவந்து " தல தல நம்ம பூச்சிபாண்டிய போட்டு கட்டதுரையோட ஆளுங்க அடிச்சுட்டு இருக்காங்க தல " அப்படின்னு சொன்னான்

கைப்புள்ள : "கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல. நம்மளோட வெளாடரதே அவனுக்கு வேலையா போச்சு" அப்படின்னு டயலாக் பேசாம, சண்ட நடந்த எடத்துக்கு அவனோட லாரில(அதுதான் எங்கயும் நிக்காம போகுமாம் !!) கெளம்பிட்டான்.வடிவேலு மாதிரி இல்லாம, நம்ம கைப்புள்ள கட்டதுரையோட ஆள நொங்கு எடுத்துட்டான். அந்த பையனோட மூஞ்சியெல்லாம் வீங்கிருச்சு. எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம். ஆனா அந்த அடிவாங்குனவன் வீட்டுக்கு போய் அவனோட அம்மாவ ஸ்கூலுக்கு கூட்டிகிட்டு வந்துட்டான். அவுங்க கம்ப்ளைன்ட் செஞ்சுட்டாங்க.

ஹெட்மாஸ்டர் எங்க க்ளாஸ்க்கு வந்து எல்லா பசங்களையும் நீல்டவ்ன்(முட்டிக்கால்) போட வச்சுட்டாரு. அப்படியே ரெண்டு க்ரூப்பும் மொறைச்சுக்கிட்டே வெயில்ல முட்டிக்கால் போட்டோம். "ஈவினிங் நீ காலிடா" அப்படின்னு ஒவ்வொருத்தனும் சொல்லிக்கிட்டு இருந்தானுங்க. ஒரு அரை மணி நேரம் இருந்துருப்போம். அப்புறம் "இப்படி மறுபடியும் செய்யக்கூடாது" அப்படின்னு சொல்லி எல்லாத்தையும் விட்டுடாங்க.

ஒருவாரத்துல மறுபடியும் ஆரம்பிச்சுருச்சு. இந்த தடவ கட்டதுரையும் கைப்புள்ளயும் அடிச்சுகிட்டாங்க. மறுபடியும் பனிஷ்மென்ட். மறுபடியும் மன்னிப்பு. ஐந்தாவது முழுவதும் இது தொடர்ந்தது.

அந்த வருடமும் முடிந்ததது. அனைவரும் ஆறாவது சென்றோம். கட்டதுரையும் கைப்புள்ளையும் ஸ்கூல் மாறியிருந்தார்கள். இருவரும் மீண்டும் ஒரே ஸ்கூல் ஒரே கிளாஸ்.. அங்கும் இரண்டு க்ரூப்பா ? அப்படீன்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது. எனக்கு நிஜமா தெரியலங்க.

ஆனா எங்க ஸ்கூல்ல படிக்கற செட், படிக்காத செட் அப்படின்னு புதிதாக ரெண்டு சேவிங் செட்டுகள் உருவாகி இருந்தன. இதில் ஹைலைட் என்னவென்றால் மாணவிகளும் இதில் அடக்கம். :-)

இப்படி பல விஷயங்கள்... அனைத்தும் பசுமையான நினைவுகள்...

நீங்களும் உங்களது நினைவுகளைச் சொல்லுங்கள் ....

Monday, 15 June 2009

கணித பாடம்

நாடோடி இலக்கியன் அவர்களின் கணித பாடமும் கிராமப்புற மாணவர்களும் படிக்கும்போது, எனது பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர் திரு. திரிலோகச்சந்திரன் அவர்களும் அறிவியல் ஆசிரியர் திரு.கதிரொளி அவர்களும் எனது நினைவில் மீண்டும் வந்து சென்றனர். அவர்களும் நாடோடி இலக்கியனின் நண்பர் (நாடோடி இலக்கியனாக கூட இருக்கலாம்) போல அனைத்து மாணவர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர்கள்.

இப்பதிவு எனது கணித ஆசிரியர் வகுப்பில் எனக்கு நடந்த பூஜை (அதாங்க அடி வாங்குனது) பற்றியது. நான் அந்த பள்ளியில் சில காரணங்களால், காலாண்டுத் தேர்வுக்கு சுமார் பத்து நாட்கள் முன்புதான் சேர்ந்து இருந்தேன். அப்போதே பெரும்பாலான பாடங்களின் சிலபஸ் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு இருந்தன. கோடை விடுமுறையின் போதே ஆரம்பித்துவிட்டார்களாம். எனது பழைய பள்ளியிலும் கோடை விடுமுறையில் பாடங்கள் நடத்தினார்கள். ஆனால் நான் ஒரே ஒரு கணித வகுப்பிற்கு மட்டும்தான் சென்றேன். நண்பர்களுடனான ஊர் சுற்றலிலும் கிரிக்கெட் மற்றும் நீச்சல் பழகுவதிலும் எனது அந்த கோடை விடுமுறை காலியாகி இருந்தது.

ஆகையால் நான் நிறைய படிக்க வேண்டி இருந்தது. முதலில் சற்று சிரமமாகத் தோன்றினாலும், என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. சில நல்ல நண்பர்கள் எனக்கு கிடைத்திருந்தனர். அவர்களது நோட்டுகளை வாங்கி அவற்றிலிருந்தவற்றை கொண்டு என்னால் முடிந்தவரை படித்து இருந்தேன்.

காலாண்டுத் தேர்வும் வந்தது. கணிதத் தேர்வில் எனது ஆமை வேகத்தால் ஐந்து மதிப்பெண் கேள்விகள் ஐந்தை எழுத முடியவில்லை. சரி பரவாயில்லை அப்பொழுதுதான் சேர்ந்து இருக்கிறோம்... யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்தில் கவலைப்படவில்லை.

அதுவரை விசாரித்து தெரிந்து கொண்டதில், வழக்கம் போல் முதல் மூன்று மதிப்பெண்களை மாணவிகள்தான் அங்கேயும் பெற்றுவந்திருக்கின்றனர். அப்போது எனது எண்ணம் முதல் மூன்றுக்குள் வருவது மட்டும்தான்...

கணித விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மேஜை மேல் வைக்கப் பட்டு இருந்தன. எழுபத்தைந்து மதிப்பெண்கள்தான் கண்டிப்பாக வரும் என்று நான் எண்ணியிருந்ததால் எதையும் கண்டு கொள்ளாமல் அமர்ந்து இருந்தேன்.

விடைத்தாள் கொடுக்கும்போது எல்லா வகுப்புகளிலும் நிச்சயமாக சில காமெடிகள் நடக்கும். விடைத்தாட்களை வரிசைப் படுத்தி ஒவ்வொருவருக்கும் பூஜையுடன் கொடுத்துக்கொண்டு இருந்தார்.முதலில் மதிப்பெண் இரண்டில் இருந்து ஆரம்பமாகி இருந்தது. சில மாணவர்களை கணித ஆசிரியர் ஓடிப் பிடித்து அடித்துக் கொண்டு இருந்தார். அந்த காட்சி இன்று நினைத்தாலும் என்னால் சிரிப்பை அடக்கமுடிவதில்லை. அப்பொழுது மாணவர்களுக்கும் அவருக்கும் நடக்கும் சில உரையாடல்கள் இன்னும் சிரிப்பாக இருக்கும். எனது நண்பன் சரவணன் செய்த காமெடி இது...

ஆசிரியர் : இத்தன அடிஷனல் பேப்பர் எழுதியும் இருவத்தஞ்சு மார்க்குதான் தொர (வழக்கமாக சொல்வது) வாங்கமுடிஞ்சுதோ ?

சரவணன் : நீங்க மார்கே போடமாட்டீங்கறீங்க சார் !! நான் நெறைய எழுதி இருக்கேன் சார் !

ஆசிரியர் : ஆமாண்டா நீ நெறைய எழுதி இருக்க... நான்தான் மார்க் போடறதில்ல ! கொஸ்டின் பேப்பர்ல இல்லாத கேள்விக்கெல்லாம் நீ பதில் எழுதுனா உனக்கு எப்புடிடா நான் மார்க் போடுறது ?

சரவணன் : சார் நீங்கதான் எக்ஸாம் ஹால்ல தெரிஞ்ச கேள்விக்கெல்லாம் மொதல்ல விடை எழுத சொன்னீங்க !! நான் எனக்கு தெரிஞ்ச கேள்விக்கெல்லாம் பதில் எழுதிட்டேன் !!!

ஆசிரியர் : ???????????????

இப்படி பல காமெடிகளுக்கு பிறகு மூன்றாவது மதிப்பெண் எடுக்கும் மாணவியை அழைத்தார். நம்மள இன்னும் கூப்புடாததால எனக்கு ஒரு சந்தோசம். அப்பாடா ! நம்ம எய்ம் சக்சஸ் அப்படின்னு ! அந்த பொண்ணு ஐம்பதுதான் வாங்குச்சு !! ரொம்ப அட்வைஸ் பண்ணிட்டு, அது அழுக ஆரம்பிச்சதால விட்டுடாரு !

அடுத்து முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவியை அழைத்தார். அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம். அந்தப்பெண் உடனே அழ ஆரம்பித்துவிட்டாள். என்னடா இது இப்படி இருக்காங்க அப்படின்னு நினைச்சேன். அந்தப்பெண் ஐம்பத்தி இரண்டு வாங்கி இருந்தாள் ! மீண்டும் அட்வைஸ் ! அடுத்ததாக இரண்டாம் மதிப்பெண் எடுக்கும் மாணவியை அழைத்தார். ஐம்பத்தியாறு வாங்கி இருந்தாள் ! மீண்டும் அட்வைஸ் ! ஆனால் அவள் மற்றவர்களை மாதிரி அழவில்லை ! அடுத்த முறை அதிக மதிப்பெண்கள் பெறுவதாக சொல்லிவிட்டு அவளது இருக்கையில் அமர்ந்தாள். சற்று தைரியமான பெண் என்று அவளை பார்த்தாலே தெரியும்.

இன்னும் அவர் என்னை அழைக்கவில்லை. நானும் அவர் என்னை அழைப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன், ஆனால் என்னை அவர் கண்டு கொள்ளவே இல்லை. நானாக அவரிடம் எனது விடைத்தாள் பற்றிக் கேட்டேன். அவர் வகுப்பு முடியும் பொழுது தருவதாகக் கூறினார். நானும் சரி என்று விட்டுவிட்டேன். சிறிது நேரத்திற்கு பிறகு மாணவிகள் பக்கம் அழுகை நின்றிருந்தது. என்னை ஆசிரியர் அழைத்தார்.

எனக்கு உள்ளுக்குள் ஒரு சந்தோசம் ! ஆகா ஆரம்பமே அசத்தலா ஆரம்பிக்குதுன்னு.. நாம வேற பர்ஸ்ட் மார்க் வாங்கிட்டோம்!! நெறைய பிகர் இருக்கே, எத நம்ம ஆளா செலக்ட் பண்ணலாம் அப்படின்னு சைடுல ஒரு காட்சி ஓடிகிட்டு இருந்தத அப்படியே நிறுத்திட்டு சார் பக்கத்துல போனேன்.

எவ்வளவு மதிப்பெண் எதிர்பார்க்கிறாய் என்றார். நானும் எழுபத்தைந்து எதிர்பார்க்கிறேன் என்றேன். பேப்பர்ல சரியாய் எழுபத்தைந்து இருந்தது. மகிழ்ச்சியுடன் பேப்பர் வாங்க கை நீட்டுனா, பேப்பர ஓரமா வச்சுட்டு எதையோ தேடுனாரு ! நான்கூட அட அதுக்குள்ள பரிசு எதாவது குடுக்கப் போறாருன்னு மனசுக்குள்ள கோட்டையெல்லாம் கட்டி, பரிசெல்லாம் ஒன்னும் வேணாம் சார் அப்படின்னு வாய தொறக்கறதுக்குள்ள , கொத்து குண்டு போட்டு கோட்டையவே தரைமட்டம் ஆக்கிட்டாரு !


பெரம்ப எடுத்து வச்சாரு பாருங்க ஒன்னு !! "எங்கடா போச்சு மீதி இருவத்தஞ்சு ?" அப்படினாரு. கொஞ்ச நேரம் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் ! அப்புறம் அப்படியே தலைய தொங்க போட்டுக்கிட்டு வந்து என்னோட எடத்துல செட்டில் ஆயிட்டேன். என்னடா எல்லார் முன்னாடியும் இப்படி அடிச்சுட்டாரு அப்படின்னு ஒரே பீலிங் ஆயிருச்சு !!

அப்புறம் ஈவினிங் தனியா கூபிட்டாரு. ஆகா தல தனியா வீடு கட்டபோறாறு போல அப்படின்னு கொஞ்சம் பயத்தோட போனேன்.

பாராட்ட ஆரம்பிச்சுட்டாரு ! என்னால நம்பவே முடியல ! அப்புறம் சொன்னாரு, "எல்லாரு முன்னாடியும் உன்ன பாராட்டுனா, நல்லா படிகுறவங்க அப்புறம் அவுங்க நண்பர்கள் எல்லாரும் உன்ன எதிரி மாதிரி நினைச்சுருவாங்க ! உனக்கும் அது ஒரு மாதிரி இருக்கும். நான் உன்ன அடிச்சதால, எல்லாருக்கும் மொத மார்க் எடுத்தா மட்டும் போதாது, நூறு மார்க் எடுக்கணும் அப்படின்னு ஒரு எண்ணம் வரும்."

கடைசியா நல்லா வேகமா எழுத பழகச்சொன்னாரு !

இன்னும் தொடரும்.....

Saturday, 13 June 2009

கிறுக்கல்கள்

வாழ்க்கைத் துணை..
நானும் சிப்பிதான்...
உன்னை முதன்முறை பார்க்கப் போகும்
அந்த ஒரு நொடிக்காக காத்துக்கிடக்கிறேன்..
இருபத்தைந்து வருடங்களாக...

HIV
பெண்ணே ! நீயும் ஒரு HIV தான் !
உதிரத்தில் உறைந்துவிட்ட HIV யை
பிரிக்க முடியாதாம் ! சொன்னார்கள் !
எனக்குள் உறைந்துவிட்ட உன்னையும்
தான்பிரிக்க முடியவில்லை !
பிரிக்க முயன்றால் முடிவு என்னவோ
மரணம் மட்டும்தான் !

Thursday, 11 June 2009

ஜன்னல்

கொசுவத்திச் சுருளை சற்றுப் பின்னோக்கி சுற்றுகிறேன்... அட ஒன்னும் இல்லங்க ! நான் ஏழாம் வகுப்பு படித்தபொழுது நடந்த ஒரு சம்பவம் !

நான் அந்த பள்ளியில் அந்த வருடம்தான் சேர்ந்திருந்தேன். அது ஒரு அரசு உதவி பெரும் பள்ளி. எனது வகுப்பறை பள்ளியில் அப்பொழது புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் இருந்தது.

தலைமை ஆசிரியர் அறையிலிருந்து சாக்பீஸ் கொண்டுவருவது, தினசரி பதிவேடு கொண்டு வருவது போன்ற சிறு சிறு வேலைகளை வகுப்பு தலைவனோ /தலைவியோ (50/50 ங்கோ) செய்வது வழக்கம். நான் புதிது என்பதால் எனக்கு அப்போது இது மாதிரியான வேலைகள் ஒன்றும் கிடையாது. நான் வகுப்பில் முன்னால் அமர்ந்திருந்த காரணத்தால், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லுமுன் வகுப்பறை ஜன்னல்களை தாளிடும் பொறுப்பு என்னிடம் வந்தது.
(இப்பவும் ஆபீஸ்ல வாரம் ஒருமுறையோ இரண்டு முறையோ அந்த வேலையத்தான் செய்றேன் !!! அதாங்க Windows Shutdown :-))

அந்த ஜன்னல்கள் அனைத்தும் கண்ணாடி மற்றும் இரும்பால் ஆனவை. நல்ல தடிமனுள்ள இரும்பு கம்பிகள் குறுக்கும் நெடுக்குமாக இருக்கும். அவற்றை தாளிடும் பொழுது சரியாக தாளிட வேண்டும். இல்லா விட்டால் மீண்டும் வெளியில் திறந்து கொள்ளும் (எல்லா ஜன்னலும் அப்படித்தாண்டா அப்படீன்னு நீங்க சொல்றது கேக்குது !!!).

அது மழை காலமாதலால், ஒரு சனிக்கிழமையன்று சற்று பலமான காற்றுடன் மழை பெய்தது. அதில் மற்ற வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகள் சரியாக மூடாத காரணத்தால் உடைந்திருந்தன. அதிர்ஷ்டவசமாக எனது வகுப்பறை ஜன்னல்கள் மட்டும் தப்பித்திருந்தன.

திங்களன்று அவற்றை பார்வையிட வந்திருந்த பள்ளியின் தாளாளர், எனது வகுப்பில் மட்டும் எப்படி ஜன்னல்கள் உடையவில்லை என்று எனது வகுப்பாசிரியரைக் கேட்க, அவர் என்னை காண்பித்து, இவன்தான் தினமும் ஜன்னல்களை தாளிட்டு செல்பவன் என்று வகுப்பில் அனைவர் முன்னும் சொல்ல, வகுப்பில் அனைவர் முன்பும் குறிப்பாக எனது சைட் (அப்பவே நாங்க ஆரம்பிச்சுடோம்ல !) முன்பு நான் ஹீரோ போலத் தெரிவது போன்றதொரு உணர்வு இருந்தாலும், எங்கே எல்லா வகுப்பு ஜன்னல்களையும் தினமும் தாளிட்டுவிட்டு செல் என்று தாளாளர் சொல்லிவிடுவாரோ என்ற பயம் எனக்குள் இருந்தது.

நல்லவேளையாக அவர் அப்படி எதுவும் சொல்லாமல், என்னிடம் எப்படித் தாளிடுவது என்று கேட்டுவிட்டு, அதை மற்ற வகுப்பறை மாணவர்களுக்கும் சொல்லித் தருமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

இந்த நிகழ்வால் என்னைப் பற்றி பள்ளியில் பரவலாகத் தெரிய ஆரம்பித்து இருந்த சமயத்தில் எனக்கு ஒரு பெரிய பல்பு காத்திருந்தது !!

அடுத்த வாரத்திலேயே, ஒரு பள்ளி நாளில் சுமார் மதியம் ஒரு மூன்று மணியளவில், திடீரென மீண்டும் காற்றுடன் மழை ஆரம்பித்தது. அப்பொழுது வகுப்பில் இருந்த ஆசிரியர் என்னிடம் ஜன்னல்களை தாளிடச் சொன்னார். வகுப்பில் இருந்த மூன்று ஜன்னல்களில் இரண்டினை தாளிட்டுவிட்டேன்.

எனக்கு வரப்போகும் ஆப்பை பற்றித் தெரியாமல்,  மூன்றாவது ஜன்னலை தாளிடும் சமயத்தில், காற்று திடீரென வேகமாக அடிக்க, ஜன்னல் சடாரென அடிக்க எனது வலது கை கண்ணாடிக்கும் இரும்பு கம்பிக்கும் இடையில் சிக்கி பெரிய வெட்டு ஒன்று விழுந்தது. கண்ணாடி தூள் தூள் ஆகியிருந்தது.

இரத்தம் வருவதைக்கண்ட ஆசிரியர், என்னை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு எட்டாம் வகுப்பில் உயரமாக இருந்த ஒரு அண்ணனிடம் சொன்னார். அந்த அண்ணன் முதல் உதவி என்ற பெயரில் டிஞ்சரை எனது கையில் ஊற்ற நான் அலறியது பள்ளியில் பலருக்கும் நினைவில் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இது போன்ற சமயங்களில், ஒரு குறிப்பிட மருத்துமனையில், எங்களது பள்ளி மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். பள்ளி நிர்வாகம் அதற்குண்டான செலவை பிறகு ஏற்றுக்கொள்ளும் என்று அந்த அண்ணன் சொல்லி கேள்விபட்டேன்.

கண்டிப்பாக தையல் போடவேண்டும் என்று பலமுறை சில்லறை வாங்கிய (அதாங்க கீழ விழுந்து அடி படறது) அனுபவத்தால் முன்னமே தெரிந்தது. ஏற்கனவே பல தையல்கள் போடப்பட்டு இருந்ததால், அப்போது அதை பற்றிய கவலை இல்லை.எனது அம்மாவை நினைத்துதான் கவலையுடன் இருந்தேன். கடந்த மூன்று வருடங்களாகத்தான் எனக்கு எந்த அடியும் படவில்லை என்று நிம்மதியாக இருந்தவர்கள் இதைப் பார்த்தால் அழுவார்களே என்று !

எனது நேரம், எப்போதும் இருக்கின்ற மருத்துவர் அன்று அங்கு இல்லை போலும். அவருக்கு பதிலாக இருந்த இன்னொரு மருத்துவர், பணம் இல்லாமல் சிகிச்சை செய்யவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ ? மயக்க மருந்து தராமலேயே தையல் போடா ஆரம்பித்து விட்டார். அப்படி ஒரு மரண வலி !

பிறகு எப்போடியோ எனது அம்மாவை சமாதானப் படுத்தி, ஒருவாறு மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தேன். அனைவரும் என்னை ஒரு ஜோக்கர் மாதிரியாகப் பார்ப்பது போலிருந்தது ! ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு எதுவும் நான் எழுத வேண்டாம் என்று ஆசிரியர் கூறியிருந்தது !

ஒரு மாதமும் முடிந்தது !! சரி வீட்டுப்பாடம் எழுதலாம் என்று எண்ணி எழுத ஆரம்பித்தேன். ஏனோ எழுதினால் அடிபட்ட இடத்தில அப்படியொரு வலி ! எதோ உள்ளுக்குள் நெருடுவது போலிருந்தது ! சரியாகிவிடும் என்று நினைத்து ஒரு வாரம் யாரிடமும் சொல்லவில்லை. ஒரு வாரத்திற்கு பிறகும் வலி சரியாகவில்லை.

பென்சில் சீவுவதற்காக வைத்து இருந்த பிளேடு கொண்டு, தையல் போடப்பட்ட இடத்தில லேசாக கீற, ஒரு சிறிய கண்ணாடித் துண்டு ஒன்று உள்ளிருந்து வெளியில் எட்டிப்பார்த்தது ! அதை வெளியில் எடுத்து விட்டால் போதும் என்று மேலும் லேசாக கீறி அதை வெளியில் எடுத்துவிட்ட பிறகுதான் வலி இல்லை.

அந்த மருத்துவரின் அலட்சியமான செயலை கண்டித்து இருக்க வேண்டுமென இப்போது நான் நினைத்தாலும், அப்போது வலி போன காரணத்தால் என்னவோ, யாரிடமும் கூறாமல் விட்டுவிட்டேன் !!!

இது மாதிரியான பல சம்பவங்கள் தொடரும்...
(உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டும்)